Tuesday, 1 March 2016

Krishna story 2

லீலை கண்ணன் கதைகள்....2
வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமணம்...
வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமகனாகப் பிறக்கப் போவதாக மகாவிஷ்ணு அறிவித்தாரே, அந்த வசுதேவரும் தேவகியும் யார்?

அந்தக் காலத்தில் யாதவர்கள் என்ற ஒரு குலத்தினர் இருந்தனர். யது என்கிற அரசனின் வம்சத்தவர்கள் இவர்கள். சூரன்தான் யாதவர்களின் தலைவன். அவனுடைய நாடு மதுரா என்றும் சூரசேனம் என்றும் இரண்டு பாகங்களை கொண்டது. உக்கிரசேனன், தேவகா என்று இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். உக்கிரசேனன் மதுரையை ஆண்டு வந்தான்.

உக்கிரசேனனுக்குக் கம்சன் என்கிற மகனும், தேவகாவுகுத் தேவகி என்கிற மகளும் இருந்தார்கள். கம்சனுக்கு சகோதரி யாரும் இல்லை. அதனால் அவன் தேவகியைத் தன் தங்கையைப் போல் நேசித்தான்.

சூரனுக்கு வசுதேவர் என்று ஒரு மகன் இருந்தார். வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமணம் நடந்தது. திருமணச் சடங்குகள் முடிந்ததும் வசுதேவர் தம் மனைவி தேவகியைத் தம் ஊர் அழைத்துச் செல்லத் தயாரானார். அதற்குப் பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தான் கம்சன். நவரத்தினக் கற்கள் இழைத்த தேரில் மணமக்கள் செல்வதென்றும், அதை நூறு தங்க ரதங்கள், நானூறு யானைகள், ஒரு பெரிய சேனை புடைசூழ்ந்து  செல்வதென்றும் அவன் ஏற்பாடு செய்திருந்தான்.

தன் தங்கையை விட்டு பிரிய வேண்டியிருக்கிறதே என்று கம்சன் மிகவும் வருந்தினான். அதனால் மணமக்கள் அமர்ந்திருந்த இரதத்தின் பக்கம் சென்று சாரதியைக் கீழே இறங்கச் சொன்னான். பிறகு தானே சாரதியின் இருக்கையில் அமர்ந்து குதிரைகளின் கடிவாளத்தை கையில் பிடித்துக்கொண்டு தங்கையின் மீது இருந்த அன்பு காரணமாக தானே ரதத்தை ஓட்ட ஆரம்பித்தான்...

ஆஹா... தங்கை மீது என்ன  ஒரு பாசம்...  கம்சனின் பாசம் அடுத்த பதிவில் தொடரும்....
இறை பணியில்
வாசு ஜி.

1 comment: