Thursday, 3 March 2016

Krishna story 4

லீலை கண்ணன் கதைகள் .......4
கம்சனின் கொடுமை......
வசுதேவர் தம் மனைவியுடன் தம்முடைய இருப்பிடத்தை அடைந்தார். நாட்கள் ஓடின தேவகி ஒரு மகனை ஈன்றெடுத்தாள். குழந்தையின் நாமகரண விழாவிற்கு, வசுதேவர் படித்த அந்தணர்களை அழைத்தார். அவர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, அதற்கு கீர்த்திமான் அதாவது 'புகழ் வாய்ந்தவன்' என்று பெயரிட்டார்கள். ஆனால் பெற்றோர்களின் சந்தோசம் வெகுநாள் நீடிக்கவில்லை. வாக்குக் கொடுத்தபடி குழந்தையைக் கம்சனிடம் கொடுத்தாக வேண்டுமே! வசுதேவரோ வாக்குத் தவறாதவர்! ஆகவே அவர் குழந்தையை எடுத்து கம்சனிடம் சென்றார். "நான் கொடுத்த வாக்குப்படி இதோ என் குழந்தையை கொண்டு வந்துவிட்டேன். இதை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்" என்றார்.

வசுதேவர் உண்மையுடன் நடந்து கொண்டதைக் கண்டு கம்சன் சந்தோஷபட்டான். குழந்தையைப் பெற்று கொண்ட கம்சன் புன்முறுவலுடன் அதை மீண்டும் வசுதேவரின் கைகளில் கொடுத்தான். "இந்த பச்சிளம் குழந்தையை நான் கொல்ல விரும்பவில்லை. உங்களுடைய எட்டாவது குழந்தைதானே என்னைக் கொல்லப் போகிறது. இது உங்களுடைய முதல் குழந்தையானதால் இதனால் எனக்கு எந்த ஆபத்தும் கிடையாது" என்று சொன்னான்.

வசுதேவர் மகிழ்ச்சியுடன் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்தார். ஆனால் கம்சனைப் போன்ற ஒரு கொடியவனின் வார்த்தைகளை நம்ப முடியாது என்பதும் அவருக்கு தெரியும். எக்கணமும் அவன் தன் மனத்தை மாற்றிக் கொள்ளலாம்; குழந்தையைக் கொல்லலாம்.! உண்மையில் அதுதான் நடந்தது!

ஒரு நாள் தேவமுனிவரான நாரதர் கம்சனை வந்து பார்த்தார். பல விஷயங்களைப் பற்றிக் கம்சனிடம் பேசிய அவர், கடைசியில் நந்தனைக் தலைவனாகக் கொண்ட கோகுலவாசிகள் அனைவருமே விஷ்ணுவின் கட்டளைப் படி அசுரர்களை வேரோடு அழிக்க உலகில் பிறந்த தேவர்கள் என்று சொன்னார். இதைக் கேட்ட கம்சன் திடுக்கிட்டான். மீண்டும் பயம் அவனைப் பற்றிக் கொண்டது. நாரதர் சென்றதும் அவன் வசுதேவரையும் தேவகியையும் சங்கிலிகளால் பிணைத்து அவர்களைச் சிறையில் அடைத்தான். அவர்களுடைய முதல் குழந்தையை உயிரோடு விட்டு வைத்தது தன்னுடைய தவறு என்று நினைத்தான். உடனே தேவகியிடம் சென்று, அவள் கையில் இருந்த குழந்தையைப் பறித்து, அதை இரக்கமின்றிக் கொன்றான். யாதவர்களையும் வெறுக்கத் தொடங்கி, அவர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். தன் தகப்பனார் உக்கிரசேனர் யாதவர்களின் தலைவராதலால், அவரையும் சிறையிட்டான். அவன் யாதவர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பிக்கவே, அவர்கள் இங்குமங்குமாக ஓடத் தொடங்கினார்கள்.

இறை பணியில்
வாசு ஜி

No comments:

Post a Comment