Monday, 29 February 2016

Story of Lord Krishna 1

கண்ணன் கதைகள்: 1
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வாக்குறுதி....

முன்னொரு சமயம், கொடியவர்களும், அகந்தை கொண்டவர்களுமான பல அசுர அரசர்களின் பாரம் தாங்க முடியாமல் பூமாதேவி தவித்தாள். உடனே அவள் ஒரு பசுவின் உருவை எடுத்துக் கொண்டு, பிரம்மாவைச் சென்று பார்த்தாள். தன்னுடைய துன்பத்தை அவள் அவரிடம் சொல்லி கதறினாள். பிரம்மா அவள் மீது இரக்கம் கொண்டார்.

பூமாதேவியைப் பார்த்து அவர், "குழந்தாய்! உன்னை ஒரே ஒருவரால்தான் காப்பாற்ற முடியும். அவர்தான் ஸ்ரீமந்நாராயணன். அவரிடம் அடைக்கலம் புகுவோம், வா'' என்றார்.

பரமசிவனையும் இன்னும் மற்ற தேவர்களையும் அழைத்துக் கொண்டு, பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணு இருக்கும் வைகுண்டத்தை அடைந்தார். அங்குள்ள திருபாற்கடலின் கரையில் நின்று கொண்டு, எல்லோரும் மிக்க பக்தியுடன் ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் தியானம் செய்தார்கள். ஆழ்ந்த தியானத்தில் இருந்து பிரம்மாவின் காதுகளில் கணீர் என்று ஒரு குரல் ஒலித்தது. அது மகாவிஷ்ணுவின் குரல்.

பிரம்மா தம் தியானத்திலிருந்து விழித்து எழுந்து, மற்ற தேவர்களைப் பார்த்து, "என் தியானத்தில் நான் நாராயணனின் குரலைக் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்று உங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறேன், கேளுங்கள். பூமாதேவியின் கஷ்டத்தை அவர் ஏற்கனவே அறிந்துள்ளார். உலகில் தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாகப் பிறக்க, அவர் தீர்மானித்துள்ளார். அவருக்கு உதவ நீங்கள் எல்லோரும் யது குலத்தில் பிறக்க வேண்டும். அவர் பூலோகத்தில் உள்ளவரை நீங்களும் அங்கு அவரோடு இருக்க வேண்டும்" என்றார்.

பிரம்மா சொன்னதைக் கேட்டு, பூமாதேவியும் மற்ற தேவர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மகா விஷ்ணுவின் வாக்குறுதி அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. எல்லோரும் அவரவர் இருப்பிடம் திரும்பினார்கள்...

இறை பணியில்
வாசு ஜி.

No comments:

Post a Comment