Thursday, 3 March 2016

Power of Bhagawan Nama

வடஇந்தியாவில் வேலை பார்த்த ஒரு பக்தருக்கு வந்தது ஒரு பெரிய தர்மஸங்கடம்!
என்ன ஸங்கடம்?
அவருக்கு எப்போ பார்த்தாலும் அவர் காதில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது! இன்னதுதான் சொல்கிறது என்று இல்லாமல், ஏதேதோ சொல்லும் அந்தக் குரல்.
இரவு தூங்கும் போதும் கூட, அந்த குரலைக் கேட்டு அவர் படக்கென்று முழித்துக் கொண்ட நாட்கள் அநேகம் !
யாருடைய குரல் இது?
இது ஆஞ்சநேயருடைய குரல்! என்று தானாகவே ஏதோ எண்ணிக் கொண்டு நண்பரிடம் சொன்னார்.
வந்தது வினை! அவரைப் பார்த்து “குறி” கேட்க தினமும் ஏகப்பட்ட ப்ரச்சனைகளோடு ஏகப்பட்ட கூட்டம்! அதற்கென ஒரு நாளை அவர் ஒதுக்க வேண்டியதாயிற்று. குறி சொல்ல பைஸா எதுவும் வாங்கமாட்டார். பின்னே கூட்டம் வராமலா போகும்?
இதுபோல் காதில் விழும் குரல் சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு, வருவோர்க்கு பதில் சொல்லி சொல்லி, கடைசியில், இந்த பக்தருடைய மனநிம்மதி போயே போய்விட்டது! சிலந்தி வலைக்குள் மாட்டிக் கொண்ட பூச்சி அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பது போல் தவித்தார் பாவம்.
“யார் என்னை காப்பாத்துவா?”
உள்ளுக்குள் புழுங்கினார்.
“எங்கிட்ட வா! நான் இருக்கேன் !” என்று சொல்லாமல் சொல்லும் பெரியவா திருவடிகளில் வந்து விழுந்தார்.
“பெரியவாளை விட்டா, எனக்கு போக்கிடம் இல்ல!  காதுல ஏதேதோ பேச்சுக்குரல் கேக்கறது! ஹனுமாரோட குரல்-ன்னு நானே கல்பனை பண்ணிண்டுட்டேன்…! குறி கேக்க வர கும்பல் ஜாஸ்தியாயிடுத்து! சிலது பலிக்க வேற செய்யறது! மொத்தத்ல என்னோட நிம்மதி போய்டுத்து! பெரியவா…..எனக்கு வடக்கே இருக்கவே பிடிக்கலை பெரியவா….பேசாம transfer வாங்கிண்டு வாங்கிண்டு வந்துடலாம் போல இருக்கு….அனுக்ரஹம் பண்ணணும் ….”
கண்களில் கண்ணீரோடு ப்ரார்த்தனை பண்ணினார்.
“எங்கிட்ட ஏன் சொல்ற? ஒனக்குத்தான் ஆஞ்சநேயரோட அருள், பரிபூர்……ணமா இருக்கே! ஹனுமார்கிட்டேயே ப்ரார்த்தனை பண்ணிக்கோயேன்!..”
கொஞ்சம் சீண்டி விளையாடினார்.
பக்தர் கூனிக் குறுகிப் போனார்…
“ஆஞ்சநேயர் பேசறார்-ன்னு நானாத்தான் சொன்னேன் பெரியவா! என்ன துர்தேவதையோ தெரியல! என்னைத் தூங்க விடமாட்டேங்கறது…! மிச்ச எல்லாரும் நம்பினாலும், எனக்கு நம்பிக்கையில்ல! பெரியவாதான் என் அவஸ்தையைப் போக்கணும்…. நானா பேசவே கூடாது-ன்னு அழிச்சாட்யமா இருந்தாலும், கண்ட கண்ட நேரத்ல என்னென்னமோ காதுல விழுந்துண்டே இருக்கு…..! ஒரே ஓலந்தான்!…. என்னைக் காப்பாத்துங்கோ!”
“எப்பவும் ராம நாமா சொல்லிண்டே…..இரு! கும்மோணம் பக்கத்ல கோவிந்தபுரத்ல போதேந்த்ராள் அதிஷ்டானம் இருக்கு. அங்க போயி கொஞ்சநாள் தங்கு!…”
ப்ரஸாதம் குடுத்தார்.
பத்துநாட்கள் கழித்து கோவிந்தபுரத்திலிருந்து திரும்பி வந்தார் அந்த பக்தர், முகமெல்லாம் மகிழ்ச்சி! ப்ரகாஶம்! பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்.
“என்ன?…..ஆஞ்சநேயஸ்வாமி ராம ஸேவைக்குப் போய்ட்டாரா…?”
குறும்பாக சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவா.
கோவிந்தபுரம் போய்விட்டு வந்தபின், அந்த பக்தருக்கு அந்த அமானுஷ்யமான குரல்கள் கேட்கவில்லை!
உள்ளே ஸதா பகவானின் நாமம் ஒலிக்க ஆரம்பித்தால், வேண்டாத குரல்கள், மானுஷ்யமோ அமானுஷ்யமோ, எதுவுமே நம் காதில் கேட்காது; கேட்டாலும் நம் உள்ளே இறங்கி நம் நிம்மதியைக் கெடுக்காது.

No comments:

Post a Comment