Thursday, 23 June 2016

Read and feel the Mother's nature

நான் படித்ததும் கண் கலங்கிய கதை...!!

இன்னிக்கு காலையில கடைத்தெருவிற்கு சென்றேன். அங்கு கடைக்கு எதிரில் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிகிட்டு இருந்தது. அங்கு பக்கத்தில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதை பார்த்ததும் கல்லை எடுத்து எடுத்து எறிந்தனர். அந்த கல் அந்த நாயின் காலில் பலமாக அடிபட்டது. காலில் இரத்தம் சொட்ட ஒட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக்கொண்டு நொன்டிகொண்டே ஓடியது.

அந்த சிறுவர்களிடம் இப்படில்லாம் செய்யாதீர்கள் அது பாவம் என்று கூறிவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு எனது வண்டியை எடுத்தேன். நாய் சென்ற வழியில் சென்றேன் சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதை பார்த்தேன். அதை பார்த்ததும் என் மனம் கலங்கியது. அங்கு ஐந்து நாய் குட்டிகள் இருந்தது. அந்த நாயின் குட்டிகள் என நினைக்கிறேன்.

அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை குட்டிகள் சாப்பிட்டு கொண்டிருந்தன. அந்த நாயின் தாய்மை பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது. நான் கொண்டுவந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அந்த நாயின் அருகில் சென்றேன். வலியில் அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் என் மனம் வருந்தியது. அதோட கண்ணை பாருங்க உங்களுக்கு புரியும் அதோட வலி. அதுவும் ஒரு உயிர் ஜீவன் தானே. அதற்கு நம்மால் உதவ முடியலைனாலும் பறவாயில்லை இந்தமாதிரி செய்யாதீர்கள். இது ஏதோ சிறுவர்கள் செய்த தவறு தான் ஆனாலும் சில அறிவாளிகளும் இப்படி செய்கின்றனர். அது தவறு என்பதை இனிமேலாவது உணருங்கள். உஙகளால் முடிந்தால் உங்கள் தெருவில் உள்ள நாய்க்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் இல்ல பழைய சோற்றை போடுங்க அது உங்க வீட்டை பாதுகாத்து நன்றியுடன் இருக்கும்.
-

Saturday, 4 June 2016

Krishna story 14

லீலை கண்ணன் கதைகள்.....14
பூதனை என்ற அரக்கியின் வதம்....

சென்ற பதிவில் நந்தகோபர் மதுரா சென்று கம்சனுக்கு கப்பம் கட்டிவிட்டு, வசுதேவரை பார்த்து இருவரும் நலம் விசாரித்தனர். நந்தகோபர்  மதுராவிலிருந்து கோகுலத்திற்கு வருவதற்குள் இங்கு கிருஷ்ணன் ஒரு லீலை பண்ணிட்டான் அதை இந்த பதிவில் பார்ப்போம்.

பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கம்சன் கொல்ல விரும்பினான். அதனால் பூதனை என்ற அரக்கியை வரவழைத்தான். தன் திட்டத்தை அவளிடம் சொன்னான். அவனுக்கு உதவ அவளும் இணங்கினாள். உடனே அவள் ஓர் அழகிய பெண்ணைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு குழந்தைகளைத் தேடி நகரங்களில் அலைந்தாள். எந்த உருவம் வேண்டுமானாலும் எடுக்கும் சக்தியைக் கொண்டவள் அவள். ஒரு நாள் அவள் எல்லா நகரங்களையும் பார்த்துக் கொண்டே ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் கோகுலத்தை பார்த்தாள். அதற்கு முன்னர் அவள் அங்கே சென்றதில்லை. அதனால் கீழே இறங்கினாள். ஓர் அழகிய பெண்ணாகத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு நந்தகோபர் வீட்டிற்குள் நுழைந்தாள். திருமகளே வந்துவிட்டதாக அவளைப் பார்த்து யசோதை நினைத்தாள். கோகுலத்து கோபிகைகள் எல்லார் மனதையும் அவள் கவர்ந்துவிட்டாள்.

குழந்தை கிருஷ்ணன் தொட்டிலில் படுத்திருந்தான். பூதனை சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் பக்கத்தில் இல்லை என்று தெரிந்ததும்   தொட்டிலில் இருந்த குழந்தையை கையில் எடுத்தாள். கீழே உட்கார்ந்து குழந்தையைத் தன் மடியில் கிடத்தினாள். விஷம் தடவியிருந்த தன் மார்பகங்களில் குழந்தையின் வாயை வைத்து அதனால் பாலுட்டத் தொடங்கினாள். இந்த வகையில் அவள் குழந்தையைக் கொல்லப் பார்த்தாள். ஆனால் துஷ்டர்களைக் கொல்லுவதற்காக வந்துள்ள பகவானை யார் கொல்ல முடியும்? கிருஷ்ணன் தன் இரு சிறு பிஞ்சுக் கையினால் அவளுடைய மார்பகத்தைப் பற்றிக் கொண்டு, பாலை உறிஞ்ச ஆரம்பித்தான்.

சில நொடிகளுக்கெல்லாம் குழந்தை தன் உயிரையே உறிஞ்சிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். வலி தாங்காமல் கத்தினாள். "போதும் போதும் என்னை விட்டுவிடு" என்று அலறினாள். அலறிக் கொண்டே அவள் குழந்தையைத் தன் மார்பகத்திலிருந்து எடுக்கப் பார்த்தாள். ஆனால் கிருஷ்ணனோ பால் குடிப்பதை நிறுத்துவதாக இல்லை. இன்னும் அதிக சந்தோஷத்துடனும் மும்முரத்துடனும் அவன் பால் குடிக்க ஆரம்பித்தான். அப்பொழுது  அவள் அலறல் சத்தத்தினால் பூமியே அதிர்ந்தது. பூதனை தன் உண்மை உருவமான அரக்கி உருவம் பெற்று செத்து கீழே விழுந்தாள். ஆனால் பயமற்ற அந்தக் குழந்தையோ அவள் உடலின் மீது அங்கும் இங்கும் தவழ்ந்து சென்று விளையாடத் தொடங்கியது.

பூதனை குரலைக் கேட்டு யசோதை அங்கு ஓடி வந்தாள். குழந்தையை கையிலெடுத்துக் கொண்டு அப்பால் சென்றாள் . குழந்தைக்குப் பால் புகட்டிவிட்டு, அதைப் பட்டாடையினால் மூடித் தூங்கச் செய்தாள். ஒன்றுமே நடக்காதது போல குழந்தை நிம்மதியாகத் தூங்கிற்று. அப்போதுதான் நந்தகோபர் மதுராவிலிருந்து திரும்பி வந்தார். அரக்கி செத்துக் கிடப்பதைப் பார்த்து அவர் நடுங்கினார். உடனே அவர் ஆயவர்கள் பலரை அழைக்க அவர்கள் அந்தப் பூதாகாரமான உடலை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கி வெளியே எடுத்து சென்று சிதையின் மீது வைத்து எரித்தார்கள்.

அந்த அரக்கி எப்படி ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து எல்லோரையும் ஏமாற்றிவிட்டாள் என்று எல்லோரும் நந்தகோபருக்குச் சொன்னார்கள். பெரிய ஆபத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றினதற்காக அவர்கள் எல்லோரும் கடவுளை துதித்தார்கள். எல்லாத் தீய அரக்கர்களையும் அழிப்பதற்காக வந்த கடவுள்தான் அந்தக் குழந்தை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.............

இறை பணியில்
வாசு ஜி.